இன்று - டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
எய்ட்ஸ் எரிமலை என்னும் தொடரின் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை 90-களிலேயே பரப்பியவர் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். பல முன்னணி மருத்துவமனைகளிலும் மருத்துவக் கருத்தரங்குகளிலும் உடல் நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கிவருபவர்.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி, விழிப்புணர்வு என்னும் விஷயத்தில் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
“எச்.ஐ.வி. பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். இந்தாண்டு உலக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான வாசகம் `குளோஸ் தி கேப்’ என்பதுதான். எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் அளிப்பது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த இடைவெளியை குறைக்கலாம். 2030-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) திட்டமிட்டுள்ளது.
இன்னும் 15 ஆண்டு களில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் உலக அளவில் இருந்த 3.50 கோடி எச்.ஐ.வி. பாதித்தவர்களில் 20 லட்சம் பேர் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. உலக அளவில் இதுவரை எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான 8 கோடி பேரில் 4 கோடி பேர் எய்ட்ஸால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2006-ல் 23 லட்சமாக இருந்த எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 20 லட்சமாக குறைந்தது. 2011-ல் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரம்.
இந்தியாவில் புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம், பரவலாகச் செய்யப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது. ஆனால் இது போதாது.
ஓர் ஆண்டில் புதிதாக எச்.ஐ.வி. பாதித்த ஒருவர்கூட இல்லை என்னும் நிலையை நாம் எட்டவேண்டும். கடந்த 2011-ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். இது, ஐந்தாண்டுக்கு முன்பு 2 லட்சமாக இருந்தது. ஒருவர்கூட எச்.ஐ.வி. பாதிப்பால் உயிரிழக்காத நிலையை நாம் எட்ட கூட்டுமருந்து ஏஆர்டி சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யவேண்டும்.
ஏஆர்டி மருந்துகள் எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளானவர்களின் உடலில் சிடி-4 என்னும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாகும்போதுதான் இந்திய அரசு ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சையை அளிக்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் சிடி-4 எண்ணிக்கை 500-க்கு குறைந்தாலே ஏஆர்டி மருந்து சிகிச்சையை அளிக்க வேண்டும் என்கிறது.
அரசாங்கம் நினைத்தால் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை துரிதப்படுத்துவதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம். காச நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்வதும் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் காச நோய் பரிசோதனை செய்துகொள்வதும் முக்கியம். காலத்தின் கட்டாயம் வேறு மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தமாக வருபவர்கள், பாலுறவு பணியாளர்கள், தன்பால் ஈர்ப்புள்ளவர்கள், திருநங்கைகள் ஆகியோர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இவர்களுக்கு முறையான விழிப்புணர்வு வழங்க வேண்டும். இடைவெளியை குறைப்பதற்கான இறுதிச் சுற்றில் இருக்கிறோம். எய்ட்ஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இந்திய அரசு மெத்தனம் காட்டாமல் துரிதமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.
-தி இந்து
0 comments:
Post a Comment