Saturday, 6 December 2014



பெரம்பலூர்,டிச.6:
பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகளை பெற்றோர் எல்.இ.டி திரையில் காணும் வசதி பெரம்பலூர் அரசு தலை மை மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் மருத்துவ மனைகளில் இல்லாத பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எடைகுறைவாகப் பிறந்த, குறைமாதத்தில் பிறந்த, அதிக எடையோடு பிறந்த குழந்தைகள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் அல்லது 2 வாரங்களுக்கு மேலாக மஞ்சள் காமாலை நோய் பாதித்த குழந்தைகள், ஆழ்மயக்கம், வலிப்பு, வயிறு உப்பிய நிலையில் உள்ள குழந்தைகள், வயிற்றுப்போக்கு, ரத்தக் கசிவுடைய குழந்தைகள் என ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளே அரசு மருத் துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகின் றனர். இங்குள்ள குழந்தைகளுக்கு எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவர்களைத் தவிர உள்ளே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே உள்ளே அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே நடப்பவை நவீனகேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, அறைக்கு வெளியே எல்.இ.டி திரையில் காட்டப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலை 11மணி முதல் 12மணிவரையிலும், மாலை 5மணிமுதல் 6மணி வரையிலும் குழந்தைகளைக் காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார நலப்பணிகள் இணைஇயக்குநர் சிவக்குமார் தெரிவித்ததாவது : பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் எல்இடி திரைமூலம் உள்ளே சிகிச்சை அளிக்கும் குழந்தைகளை வெளியே காத்திருக்கும் பெற்றோர் பார்ப்பதற்கு நவீன வசதிசெய்யப்பட்டுள்ளது. அரசின் விரிவானமருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் இதுவரை 2,060 நோயாளி களுக்கு ரூ2.57கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காப்பீட்டுத்திட்ட தொகையாக ரூ2.57கோடி பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையினைக் கொண்டு மருத்துவமனைக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித் தார். அப்போது இணைஇயக்குநரிடம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பலமாதங்களாக ரேடியாலஜிஸ்ட் பணியிடம் நிரப்பப் படாமல் உள்ளதே எனக்கேட்டதற்கு, உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள், ஆள் இருந்தால் சொல்லுங்கள், எங்குமே கிடைக்கவில்லை. தற்போது கடலூர் மாவட்டத்திலிருந்துதான் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை வந்துசெல்கிறார் எனத்தெரிவித்தார்.
மேலும் கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம் ரூ.6.50 லட்சம் மதிப்பில், பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் உறவினர்களுக்கான தங்கும்அறை கட்டித்தரப்பட்டது. தற்போது அந்தஅறை ஐசியு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பிரசவித்த பெண்களின் உறவினர்கள் பனியிலும், மழையிலும் மரத்தடியில் படுத்துக் கிடக்கிறார்களே எனக்கேள்வி எழுப்பினர்.அதற்கு தற்போது 100 படுக்கை வசதிகொண்ட தாய்சேய்நல மகப்பேறு பிரிவு கட்டப்பட்டு வருகிறது. அந்தப்பிரிவு செயல்படத் தொடங்கினால், இதுபோன்ற வர்களுக்கு தனியாக தங்குமிடம் செய்துதரப்படும் எனத்தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அரசு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள் உடனி ருந்தனர்.


-தினகரன்.

0 comments:

Post a Comment