சிவதாச சுவாமிகள் (நாசர்) குருவாக இருக்கும் நாடக சபாவில் சிறுவர் களாகச் சேருகிறார்கள் காளியும் (சித்தார்த்) கோமதியும் (ப்ரித்விராஜ்). பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் தமிழ்ப் புராண நாடகங்களை மனப்பாடம் செய்து, கதாபாத்திரங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். பின்னாளில் இவர்கள் காளியப்ப பாகவதராகவும் கோமதி நாயகம் பிள்ளையாகவும் நாடக மேடையில் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தக் குழுவில் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கும் வடிவு (வேதிகா) வந்து சேர்கிறார். கோமதி இவள்பால் கவரப்படுகிறார்.
சித்தார்த் தனது நடிப்பில் பாரம்பரிய வழியைப் புதுமையாக வெளிப்படுத்துகிறார். இதனால் நாசருக்கு சித்தார்த்தை மிகவும் பிடித்துப்போகிறது. பாரம்பரிய முறையை மீறாத ப்ரித்விராஜ், நாசர் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக நினைத்து பொறாமை கொள்கிறார். ஒரு கட்டத்தில் சித்தார்த்தை ராஜாபார்ட்டாக உயர்த்துகிறார் நாசர். இதனால் ப்ரித்விராஜின் பொறாமை அதிகரிக்கிறது. ஜமீன்தாரின் மகளைக் காதலிப்பதால் கெட்ட பெயர் எடுக்கும் சித்தார்த்தை நாசர் தண்டிக்கிறார். நாசரின் மறைவுக்குப் பிறகு ப்ரித்விராஜ் சித்தார்த்தை விரட்டி அடிக்கிறார்.
சித்தார்த் வெளியேற்றப்பட்ட பிறகு ப்ரித்வியால் தான் நினைத்த வாழ்க்கையை வாழ முடிந்ததா? வெளியேற்றப்பட்ட சித்தார்த் என்ன ஆனார்? இருவரும் மீண்டும் சந்தித்தார்களா? வேதிகா யாரைக் காதலிக்கிறார்? இருவரில் யார் காவியத் தலைவன் என்பதுதான் மீதிக்கதை.
கதை புதிதல்ல, சொல்லப்போனால் பல காட்சிகளைப் பார்க்கும்போதே அடுத்த காட்சியை சட்டென்று ஊகித்துவிடலாம். இதே கதை, திரைக்கதையை பல தமிழ்ப் படங்களில் பார்த்தாகிவிட்டது. ஆனால் இயக்குநர் வசந்த பாலன் பி.யு.சின்னப்பா காலத்து நாடக உலகைத் திரையில் உயிர்ப்புடன் கொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள். இதுபோன்ற மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் படத்தை பார்க்கும்போது அதிகமாக ஏற்படுகிறது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு மனம்திறந்து பாராட்டலாம்.
சித்தார்த்தின் கதாபாத்திரத்தில் இருக்கும் கலை நுட்பம், ரசிப்புத்தன்மை, விடுதலை வேட்கை, குற்றவுணர்ச்சியால் துடிதுடிக்கும் நேர்மை எனப் பல பரிமாணங்களை இயக்குநர் செறிவாகச் செதுக்கியுள்ளார். ஆனால் பின் பாதியில் சித்தார்த் தியாகியாக உருவெடுப்பது டூமச்சாகத் தோன்றுகிறது.
நாடகக் கலையில் பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு தன் வாழ்வை அர்ப்பணிக்கும் கோமதி நாயகமாக மிரட்டுகிறார் ப்ரித்விராஜ். ஒவ்வொருமுறையும் நடிப்பில் தன்னை சித்தார்த் மிஞ்சும்போதும் எழும் பொறாமை, வெறுப்பு ஆகியவற்றை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஸ்த்ரீ பார்ட், ராஜபார்ட், கர்ணன் வேடங்களில் நடிக்கும்போது அவரது தமிழும் நடிப்பும் நெருடுகிறது. தன் கலை வாழ்விலும், காதல் வாழ்விலும் சித்தார்த் முன்னால் தோற்றுப்போய் ஏதுமில்லாதவனாக ப்ரித்விராஜ் நிற்பதை ஆழமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நளினமான நடன அசைவுகள், அழகிய முகபாவங்களில் தானும் நடிப்பில் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் வேதிகா. “நான் இன்னைக்கு நல்லா நடிச்சேனா?” என அவர் சித்தார்த்திடம் கேட்கும் காட்சி ரசிக்கவைக்கிறது.
அரக்கன் சூரபத்மனாக ப்ரித்விராஜ் ஆக்ரோஷத்தோடு சற்று மிகையான நடிப்பை வெளிப்படுத்தும்போது அதே கதாபாத் திரத்தை அலட்டிக்கொள்ளாமல் அனாயாசமாகக் சித்தார்த் நடித்துக் காட்டும் காட்சி அருமை.
அதைத் தொடர்ந்து நாசரிடம் ப்ரித்விராஜ் விவாதிக்கும் காட்சியில் அவர்களுடன் ஜெயமோகன், வசந்த பாலன் ஆகியோரும் சபாஷ் சொல்ல வைக்கிறார்கள்.
அன்றைய நாடக அரங்க அமைப்பு முறை காலகட்டத்தைக் கொண்டுவரும் இயக்குநர், புராண நாடகக் காட்சிகளில் நடிகர்களின் அந்தகால நடிகர்களின் நடிப்பு முறைகளை இன்றைய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார். தனக்குக் கிடைத்த பின்புலத்தை அவர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இரட்டை நாயனம் போல வசந்த பாலனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவருக்கு ஒருவர் இசைந்து கொடுத்து கதையை சித்தரிக்கிறார்கள். ஆனால் மேடை நாடகத்துக்கு முதன்மையான ஆர்மோனியம் அதிகம் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.
சுதந்திரப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த கால கட்டத்தில், நாடகத் தையே வாழ்க்கையாகக் கொண்ட கதாபாத்திரங்களைப் பின்தொடரும் ஒரு திரைப்படத்தில் அவர்களது நிஜமான வாழ்வியல் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதிலும் காதல் காட்சிகள் அந்தக் காலக்கட்டத்தோடு பொருந்தாமல் செயற்கையாக எரிச்சலூட்டுகிறது.
ஒரு நாடக நடிகருக்கு அசலான துப்பாக்கி எப்படி அவ்வளவு சுலபமாகக் கிடைத்தது என்பதற்குக் காட்சிகள் நியாயம் சேர்க்கவில்லை.
அதேசமயம், மென்மையாக படம் முழுக்க வின்டேஜ் உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.
திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது.
-தி இந்து.
0 comments:
Post a Comment