Wednesday, 12 March 2014

தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவால் ஒளிப்பதிவாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வரும் மக்களவை தேர்தல் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் ஒளிப்பதிவாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைக்குழு, வாகனத் தணிக்கை குழு மற்றும் தேர்தல் செலவு கண்காணிப்புக் குழு உள்ளிட்ட குழுக்களில் தற்போது 23 தனியார் ஒளிப்பதிவாளர்கள் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை, கடந்த 5-ம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் குழு ஒன்றுக்கு ஒரு ஒளிப்பதிவாளர் வீதம் நாள்தோறும் நடைபெறும் வாகனச் சோதனை, செலவுக் கணக்கு உள்ளிட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் புதிய உத்தரவு ஒன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது. அதில், தேர்தல் பறக்கும் படைக் குழு, வாகனத் தணிக்கை குழு மற்றும் தேர்தல் செலவைக் கண்காணிக்கும் குழு உள்ளிட்ட குழுக்களில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள் ஒரே விடியோ கேமராவை பயன்படுத்தி, நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 3 ஒளிப்பதிவாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பதிவு செய்து தர வேண்டும், இதற்கு ஒரு கேமராவுக்கான வாடகை கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தனித்தனி கேமரா மூலம் நிகழ்ச்சிக்களை விடியோ பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர்கள், தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கேமராவுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை 3 ஒளிப்பதிவாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச்சங்க மாவட்டச் செயலர் அருண் கூறியது: கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாள் ஒன்றுக்கு ரூ. 2,100 வாடகையாக வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ரூ. 2,500 தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணைய உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒளிப்பதிவாளர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், ஒளிப்பதிவாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை வழங்கப்படுகிறது. ஆனால் ஒளிப்பதிவாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் பணம் சம்பள தொகைக்குகூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், தேர்தல் ஆணையமும் இப்பிரச்னையில் தலையிட்டு தேர்தல் குழுக்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment