Monday, 12 May 2014


நாகை மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து ஹிந்துக் கோயில்களின் சொத்துகளை மீட்காவிட்டால், தொடர்புடைய இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி கட்டப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
இதுகுறித்து நாகையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
நாகை மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயில்கள் ஏராளம் உள்ளன. இந்தக் கோயில் சொத்துகள் தனியார் மற்றும் பிற மதத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்தச் சொத்துகளை மீட்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டும், அறநிலையத் துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருப்பது வேதனையளிக்கிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளை தனியார் மற்றும் பிற மதத்தவர்களிடமிருந்து மீட்க அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தனியார்
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவிக் கொடி கட்டப்பட்டு, கோயில் சொத்து என பிரகடனப்படுத்தப்படும்.
தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, தீவிரவாதிகளை ஒடுக்க அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இலவச கட்டாயக் கல்விச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், ஏராளமான தனியார் பள்ளிகள் இதை அமல்படுத்த மறுக்கின்றன. எனவே, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், 25 சதவீத ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவித்துள்ளது ஏற்புடையதல்ல. ஜல்லிக்கட்டை, உரிய நெறிமுறைகளுடன் நடத்த அனுமதியளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் உருவான பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தக் கூட்டணி நீடிக்க வேண்டியது அவசியம் என்றார் அர்ஜுன் சம்பத்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment