ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாக வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும், காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும்.
அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்
கியதாகும்.
பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி. 3-ஆவது நூற்றாண்டில் இந்த விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி பிற நாட்டவர்களை ஈர்க்கும் பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டாகும்.
15-ஆம் நூற்றாண்டில் எருது சண்டை எனப்படும் போட்டி ஸ்பெயின் நாட்டில் உருவாகி மெக்சிகோ, பெரு, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளுக்குப் பரவியது. அந்தப் போட்டியில் மாடோ, மனிதனோ மரணம் அடைவது இயல்பானாது எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உருவான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஸ்பெயின் நாட்டில் உருவான எருதுச் சண்டை போன்றது அல்ல. இங்கு வீர விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
கலாசாரம் மற்றும் சமூக உரிமைகளைத் தொடர்ந்து பராமரிப்பதன் அவசியத்தை 1948-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனச் சட்டம் வலியுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிப்பதால் சுமார் 60,000 காளைகள் அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்கவும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைக் காப்பாற்றவும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
அதற்காக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
நன்றி-தினமணி.
0 comments:
Post a Comment